புங்குடுதீவு 10 ம் வட்டாரத்தில் அமைந்துள்ள கண்ணகை அம்மன் கோவில் .
கி.பி.1505 லிருந்து போர்ச்சுகீசியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இலங்கையின் புங்குடுதீவு நிர்வாகத்தினரில் குறிப்பிடத்தக்கவர் கதிரவேலு ஆறுமுகம் உடையார் ஆவார். இவருக்கு புங்குடுதீவு கிழக்கில் இருந்து தெற்குக் கடற்கரை வரை காணிகள் இருந்தன. இவர் தனது பட்டியிலிருந்து மந்தைகளைக் காலையில் வெளியில் சென்று மேய்ந்து வருவதற்காகத் திறந்து விடுவார். இவரது மாடுகளும் எருமைகளும் வழமைப்பிரகாரம் வெளியில் சென்று வயிறார மேய்ந்து விட்டு மாலையில் தங்களது பட்டிக்குத் திரும்பி விடும். ஒருநாள் மாலையாகியும் அவரது மாடுகள் பட்டிக்குத் திரும்பவில்லை. உடனே உடையார் தனக்கு வேண்டிய சிலருடன் மாடுகள் வழக்கமாக மேயப்போகும் இடங்களுக்குத் தேடிப்போனார். என்னே அதிசயம்! இந்து சமுத்திரத்தின் தென்கிழக்குக் கடற்கரையில் கோரியா என்னும் இடத்தின் ஒருபகுதியில் ஏதோ ஒன்றைச் சுற்றி வளைத்துக் கொண்டு அவரது மாடுகள் நின்றன. அங்கு சென்று மாடுகளைத் துரத்தினர். ஆனால் மாடுகள் அந்த இடத்தை விட்டு அசையவில்லை. அருகில் சென்று பார்த்தபோது அங்கே மாடுகளின் நடுவே ஓர் அழகிய பேழை காணப்பட்டது. சென்றவர்கள் பேழையைத் தூக்கிக் கரைக்குக் கொண்டு வர மாடுகளும் கரைக்குத் திரும்பி வந்தன. கரைக்கு வந்ததும் பெட்டியை ஓரிடத்தில் வைத்தபோது அப்பெட்டி நிலத்தில் இருப்புக் கொள்ளவில்லை. இதனால் திரும்பவும் அவ்விடத்தில் இருந்து தூக்கிக் கொண்டு வந்து நாயன்மார் காடு என்ற இடத்தில் வைத்துத் திறந்து பார்க்க முற்பட்டனர். ஆனால் அந்த இடத்திலும் அப்பெட்டி இருப்புக் கொள்ளாததோடு அவர்களால் பெட்டியைத் திறக்கவும் முடியவில்லை. அவர்கள் மீண்டும் அப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு தற்போது இக்கோயில் அமைந்துள்ள இடத்திற்கு வந்தனர். அங்குள்ள ஒரு பழைமையான பூவரசம் மரத்தின் நிழலில் வைத்துவிட்டு இளைப்பாறியபின் திரும்பவும் தூக்கினர். ஆனால் அவர்களால் மீண்டும் அப்பெட்டியை அவ்விடத்தில் இருந்து தூக்க முடியவில்லை. இச்செய்தி ஊருக்குள் பரவியதும் பலர் அங்கு வந்து சேர்ந்தனர். எல்லோரும் சேர்ந்து தூக்க முயன்றும் முடியாததால் பெட்டியைத் திறந்து பார்த்தனர். அதனுள் அழகான ஒளிமயமான அம்பாள் சிலை ஒன்று காணப்பட்டது. இதனைப் பார்த்துக் கொண்டு நின்ற ஒரு வயோதிகப் பெண் உருக்கொண்டு அம்பாளே பேசுவது போல் பேச முற்பட்டாள்-- நான் திருவருள் கூட்டிய கண்ணகிப்பெண். என்னுடன் எனது பாதுகாப்பிற்காக இதோ பத்திரகாளிக்கும் இந்த இடம் பிடித்துக் கொண்ட படியால் இங்கு வந்து சேர்ந்தோம். எங்களை இந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து ஆறுதல்படுத்துங்கள். நன்மை உங்களை நாடி வரும். மற்ற ஆறுசிலைகள் வெவ்வேறு இடங்களுக்குப் போயிருக்கின்றன. அங்குள்ளோர் அவற்றைப் பார்க்கட்டும் என்று கூறினாள். கண்ணகியாக உருக்கொண்டு அவ்வயோதியப்பெண் கூறியதைக் கேட்ட அனைவரும் பக்தி பரவசமடைந்தனர். சில நாட்களுக்கு பின்னர் உருக்கொண்ட அம்மையின் திருவாக்கின்படி ஏனைய சிலைகளும் கரம்பன், காரைநாகர்,