செவ்வாய், 13 மார்ச், 2012


திருப்பூங்குடி ஆறுமுகம்

திருப்பூங்குடி ஆறுமுகம் இலங்கையில் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தனது கதாப்பிரசங்கங்களினாலும், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளாலும் பெயர் பெற்றவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மற்றும் இலங்கை ரூபவாகினித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தமிழ் மற்றும் சைவப்பணியாற்றியவர்.
புங்குடுதீவில் கிழக்கூர் பகுதியில் பெரும் வணிகர் கந்தப்பு, அன்னப்பிள்ளை ஆகியோருக்கு மூத்த புத்திரனாகத் தோன்றியவர் திருப்பூங்குடி ஆறுமுகம் எனப் பின்பு பெயர் விளங்கிய கந்தப்பு ஆறுமுகம். தனது ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்த இவர், தனது அயராத உழைப்பினாலும், மனம் தளராத உறுதியினாலும், கல்வியில் உயர்ந்து, பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரில் பயின்று, ஆசிரியராகப் பரிணமித்தார். கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் சித்திரக்கலையினையும், கட்டிடக்கலையினையும் கற்றுத்தேர்ந்தார். இவர் கொழும்பு விவாகானந்தாக் கல்லூரியில் ஆசிரியராகவும், யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார்.
தன் சிறுவயதிலேயே நாடக்கலையில் பெரும் நாட்டம் கொண்டவராக இருந்தார். தன் தாய்மாமனாராகிய பொன்னம்பலம் அவர்களின் வழிகாட்டலில் பல நாடகங்களில் நடித்தார். இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, எனத் தூரதேசங்களிலும் தனது கதாப்பிரசங்கங்களினாலும், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளாலும் பெயர் பெற்றவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மற்றும் இலங்கை ரூபவாகினித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தமிழ் மற்றும் சைவப்பணியாற்றியவர்.
வில்லுப்பாட்டு என்னும் கிராமியக் கலைவடிவத்தை முதல்முதல் ஈழப்பெருமண்ணில் புதுமெருகோடு அரங்கேற்றி விரிவுபடுத்தியர் “திருப்பூங்குடி” என்று தன் தாயூரின் பெயரால் பெருமையுடன் அழைக்கப்படும் திருப்பூங்குடி ஆறுமுகம். இன்று வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளில் பிரபலமாக பிரகாசித்துகொண்டிருக்கும் சின்னமணி, நாச்சிமார் கோவிலடி இராஜன், போன்றவர்கள் திருப்பூங்குடி அவர்களிடம் வில்லிசை பயின்றவர்கள்.
இன்னிசை வேந்தர் பொன். சுந்தரலிங்கம், பொன் சுபாஸ் சந்திரன் ஆகியோர் திருபூங்குடி அவர்களின் மைத்துனர்கள் ஆவர்.
திருப்பூங்குடி அவர்களின் சைவத்தமிழ் பணியைப் பாராட்டி சுத்தானந்தபாரதி அவர்கள் “அன்புக்கடல்” என்ற போற்றிப் புகழ்ந்துள்ளார். தமிழிசைமாமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும் இவருக்கு “வில்லிசைமழை” எனப் பட்டமளித்துக் கெளரவமளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக